வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த மாடுகள்; வாங்க ஆளில்லை
பொய்கையில் இன்று காலை தொடங்கிய மாட்டுச்சந்தையில் வாங்க ஆளில்லாததால் கால்நடை வியாபாரிகளும் விவசாயிகளும் விரக்தியடைந்தனர்;
வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்றும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும் , ஆந்திர, கர்நாடக மாநிலத்திலிருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருதுகள், எருமைகள், ஆடுகள் , கோழிகள் என கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன .
சாதாரணமாக பொய்கை மாட்டுச் சந்தையில் ரூபாய் 3 கோடி முதல் ரூபாய் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் . ஊரடங்கு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் பொய்கை மாட்டுச் சந்தைக்கு அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் கடந்த வாரம் மாடுகள் சரியாக வரவில்லை . விற்பனையும் மந்தமாக இருந்தது .
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலைபொய்கை மாட்டுச் சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக வந்தன . ஆனால் வாங்குவதற்கு எதிர்பார்த்த அளவில் மக்கள் வராததால் கால்நடை வியாபாரிகளும் , விவசாயிகளும் , கால்நடை வளர்ப்போரும் ஏமாற்றத்துக்குள்ளயினர் .
இது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது வழக்கமாக ரூபாய் 3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் . கொரோனா நெருக்கடியால் பொருளாதார ரீதியில் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருப்பதே கால்நடை வர்த்தகம் பாதித்ததற்கு காரணம் . இன்று 1 கோடியை தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கும் என்றனர்.