மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்: கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பை விரிவுபடுத்த மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் மீன் வளர்ப்பை விரிவுபடுத்திட மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ( 2.47 ஏக்கர் ) ரூபாய் 7 லட்சம் செலவு செய்து மீன்குளம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது .
அதாவது 3.50 லட்சம் மற்றும் ஒரு ஹெக்டர் நீர்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்திற்கான தொகையான ரூபாய் 1.50 லட்சத்தில் 40 சதவீதம் மானியமாக மொத்தம் ரூபாய் 60,000 பின்னேற்பு மானியமாக அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது .
இதில் 0.25 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை உள்ள பரப்பில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மீன் வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க பயனாளி சொந்த நிலம் அல்லது ஐந்து வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும் . முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் .
மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், வேலூர் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ, தொலை பேசி மூலமோ தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் .