வேலூரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு, சாலைமறியலால் பரபரப்பு

வேலூரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-21 13:15 GMT

வேலூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனத்தினர் கடந்தவாரம் செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை செல்போன் கோபுரம் அமைக்க ஜெனரேட்டர் உள்ளிட்ட கருவிகளை நிறுவனத்தினர் கொண்டுவந்தனர்.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கஸ்பா மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். செல்போன் கோபுரம் அமைப்பதால் அதன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோபுரம் அமைக்க கூடாது என்றனர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் செல்போன் கம்பெனி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News