வேலூரில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் பொருட்கள் விடுபட்டுள்ளதாக புகார்

வேலூரில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் சில பொருட்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Update: 2021-06-16 17:00 GMT

வேலூரில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் பொருட்கள் விடுபட்டுள்ளதாக புகார்

தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மே மாதம் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது.

இதனிடையே 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் நேற்று முன்தினம் வழங்கும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 கடைகள் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி ஓல்டுடவுன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பில் சில பொருட்கள் விடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், மளிகை தொகுப்பில் ஒரு சிலருக்கு சீரக பாக்கெட்டுகள், சிலருக்கு கடுகு போன்ற ஏதாவது ஒரு பொருள் விடுபட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து கடையில் பணிபுரியும் ஊழியரிடம் கேட்டபோது, குடோனில் இருந்து அனுப்பப்படும் தொகுப்பு அப்படியே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அதை வாங்கி இங்கு வைத்து சோதனை செய்த பின்னரே வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர். பொருட்கள் விடுபட வாய்ப்பு இல்லை என்றனர்.

நேற்று அந்த கடைக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வந்தனர். ஆனால் கடையில் பொருட்கள் இல்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருப்பில் இருந்த தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடோனில் இருந்து வந்தவுடன் பொருட்கள் வழங்கப்படும் என கடை ஊழியர் தெரிவித்தார்

Tags:    

Similar News