தீபாவளியொட்டி கூடுதல் பாதுகாப்பு: வேலூரில் டி.ஐ.ஜி பேட்டி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து நிலையம் ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறினார்

Update: 2023-11-02 14:22 GMT

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் 

வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சமூக விரோதிகள் பயணிகளிடம் செல்போன் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கும் உடைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டது.

புறநகர் காவல் நிலையத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன், காவல் ஆய்வாளர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பயணிகளை வழியனுப்ப உறவினர்கள் வருகின்றனர்.

பேருந்து நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை பாதுகாப்பு தடுக்கவும் ஏற்கனவே நடந்த குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் இது உதவும்.

புதிய பேருந்து நிலையத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மார்க்கெட், பேருந்து நிலையம் ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.

முன்னதாக பாலாற்றங்கரையோரம் உள்ள டோபிக்கானா பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News