ஹோட்டலில் ரூ. 18 லட்சம் பறிமுதல்- 8 பேரிடம் விசாரணை

Update: 2021-04-02 07:00 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் ஹோட்டடலில் நள்ளிரவில் நடைபெற்ற திடீர் சோதனையில் 18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கல்புதூர் மெட்டுக்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹோட்டலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக சிலர் பட்டியல் தயாரிப்பதாகவும் பணம் கை மாறுவதாகவும் வந்த ரகசிய புகாரையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சண்முகசுந்தரம் மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான புண்ணியகோட்டி மற்றும் ஒரு டி.எஸ்.பி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவு 1 மணி முதல் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்ததில் அங்கு சிலர் பூத் சிலிப்புகளையும், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு படம் மற்றும் அக்கட்சியின் வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டிருந்த தேர்தல் துண்டுப் பிரசுரங்களையும் கட்டுக்கட்டாக இருப்பதும், மேலும் அவர்கள் கவர்களில் பணத்தை பிரித்து போடும் பணியை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின் பேரில் அங்கிருந்த 8 பேரையும் கையும் களவுமாக பிடித்த காட்பாடி போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தனியார் உணவகத்தில் இருந்து ரூ.18 லட்சம் ரூபாயும், வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள், அதிமுக வேட்பாளரின் படம் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியல்களும் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சோதனை நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News