காட்பாடியில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம்
காட்பாடியில் நவீன வசதிகளுடன் ரூபாய் 10 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் அமையவுள்ளது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நவீன வசதிகளுடன் 10 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் விளையாட்டு மைதானம் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் இருந்தது. இதனால் விளையாட்டு வீரர்கள், பல்வேறு போட்டிகளில் தங்களது திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவித்து வந்தனர்.
இதற்கிடையே விளையாட்டு மைதானம் அமைக்க பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக காட்பாடியில் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் உள்ள இடத்திற்கு அருகே 36.68 ஏக்கரில் ரூபாய் 16.45 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் கூடை பந்து, ஹாக்கி, கோ கோ, கபடி, இறகுபந்து, நீச்சல் குளம், கால்பந்து, 400 மீட்டர் தடகள பாதை, 1,500 பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர் அரங்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப் பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கு அருகிலேயே தற்போது நவீன வசதிகளுடன் ரூபாய் 10 கோடியில், உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும். உள்விளையாட்டு அரங்கில் இறகு பந்து, கை பந்து என்று தேவைக்கேற்ப மாற்றியமைக்கக் கூடிய வகையில் நவீன விளையாட்டு அரங்கமாக அமைய உள்ளது .
இந்த விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும் . இதனால் ரயில் வந்து செல்லும் வரை மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். எனவே அந்த இடத்தில், ரயில்வே பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே அப்பதியில் விரைவில் ரயில்வே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் .
வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. எனவே கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.