மது வாங்க பணம் கேட்டு பாட்டியை கொலை செய்த பேரன்
காட்பாடியில் மூதாட்டியை வெட்டி கொலை செய்த பேரனுக்கு காவல்துறையினர் வலைவீச்சு.;
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி (60), இவரது பேரன் அஜித்(20). இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சாந்தி கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காட்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டி சாந்தியுடன் வசித்து வந்த அவரது பேரன் அஜித் தலைமறைவாகியுள்ளார். மூதாட்டியின் கொலை குறித்து காவல் துறை மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பேரன் அஜித்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மதுவிற்காக பணம் கேட்டு சாந்தியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் பாட்டி சாந்தியை பேரன் அஜித் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள அஜித்தை தேடி வருகின்றனர்.