காட்பாடியில் அரசு, வங்கி ஊழியர்கள் போராட்டம்: 450 பேர் கைது

காட்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-28 16:09 GMT

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்

மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வேலூர் அண்ணா சாலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் 20 நிமிடங்களுக்கு மேலாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல பி.எஸ்.என்.எல். மற்றும் தபால் நிலைய ஊழியர்களும் அவர்களது அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சீனிவாசன். ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் வாரா, முன்னாள் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டதால்  சுமார் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

காட்பாடி ரெயில் நிலையம் முன்பு எஸ் ஆர் எம் யு ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும் ரெயில்வே தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News