ஜெயலலிதா எப்படி இறந்தார் என யாருக்கும் தெரியாது. அவரை தீபா, விவேக் ஆகிய உறவினர்கள் கூட பார்க்கவில்லை என காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 10-வது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காட்பாடி தொகுதிக்குட்பட்ட திருவலம், பள்ளிகுப்பம், சத்தியாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கே.வி.குப்பம் தொகுதியிலும் வேன் மூலம் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என யாருக்கும் தெரியாது. அவரது உறவினரான தீபா, விவேக் போன்றவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பி.எஸ் 12 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை. முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை.
காவல்துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ள போது தமிழகம் வெற்றி நடை போடுகிறது என பொய் கூறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வெற்றியை போல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியடைய செய்ய வேண்டும். துரைமுருகன் இந்தமுறையும் வென்றால் அமைச்சராவார் அப்படி ஆனால் பல திட்டங்களை நிறைவேற்றுவார் என உதயநிதி பேசினார்.