ரயிலில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த வெள்ளிகட்டிகள் பறிமுதல்
ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட வெள்ளிக்கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப்படையின் பறிமுதல் செய்தனர்;
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கட்டிகள், ரொக்கப்பணம் கோவைக்கு கொண்டு செல்லப்படுவதாக ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்புப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில் சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்புப்படை சிஐபி இன்ஸ்பெக்டர் மதுசூதனன்ரெட்டி , சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த், தலைமையிலான குழுவினர் ரேணிகுண்டாவில் நின்று புறப்பட்ட குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனையிட்டனர் .
எஸ் 7 பெட்டியிலும் இவர்களது சோதனை தொடர்ந்தது. அந்த பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனையிட்டனர் . இந்த சோதனையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூபாய் 33 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை இருப்பது கண்டு பிடிக்கப்பட் டது .
அவற்றை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர் . அதில் அவர்கள் சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் , பிரகாஷ் , சுரேஷ் , நித்தியானந்தம் ஆகிய 4 பேர் என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய வெள்ளி நகைகளை விஜயவாடாவில் கட்டிகளாக மாற்றி கோவைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது .
அதேபோல் அவர்கள் கையில் கொண்டு வந்த ரூபாய் 33 லட்சம் ரொக்கப்பணத்துக்கான ஆவணம் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது . இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப்படை குழுவினர் , வேலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் . அத்துடன் , இது போன்று காட்பாடி வழியாக ரயில்களில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் தங்கம் , வெள்ளி என விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக தொடர்ந்து களம் இறங்க ரயில்வே பாதுகாப்புப்படை குழுவினர் முடிவு செய்துள்ளனர்