குடியாத்தம் அடுத்த மோர்தானா அருகே கிராமத்தில் நுழைய முயன்ற 7 யானைகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற 7 யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்
குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது . இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை அதிகளவு உள்ளது. மேலும் ஆந்திர வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கு உள்ள யானைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் இரைதேடி தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச் சரகத்திற்குள் நுழைவது வழக்கம் . மேலும் குடியாத்தம் வனப்பகுதியொட்டி உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு பயிரிட்டுள்ள வாழை, நெல், மா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது .
அதன்படி நேற்று குட்டியுடன் 7 யானைகள் ஆந்திர வனச்சரகத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த யானைகள் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் நுழைய முயற்சி செய்துள்ளது. அப்போது ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர் .
ஆனால் யானைகள் மீண்டும் மோர்தானா அணைப்பகுதியில் சுற்றி வருகிறது . கிராமத்திற்கு நுழையாதபடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் .