கணவரின் முதல் மனைவியின் மகன்களின் உடம்பில் சூடு வைத்த சித்தி கைது
குடியாத்தத்தில் கணவரின் முதல் மனைவியின் மகன்களின் உடம்பில் சூடு வைத்து சித்ரவதை செய்த சித்தியை போலீசார் கைது செய்தனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 35), கூலி தொழிலாளி. இவரும் ஈஸ்வரி என்பவரும் 2009-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தார்த் (10), நித்திஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சித்தார்த் குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், நித்திஷ் பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் குடியாத்தம் செதுக்கரைரை சேர்ந்த வேணி (30) என்பவர் தனது முதல் கணவரை பிரிந்து கடந்த 2019-ம் ஆண்டு சேட்டுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது குடியாத்தம் பிச்சனூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் சேட்டு, 2-வது மனைவி வேணு, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
காலையில் வேலைக்காக வெளியூர் சென்று விட்டால் இரவு தான் சேட்டு வீடு திரும்புவார். பகல் நேரங்களில் மகன்களை சித்தி வேணி கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு கரண்டி மற்றும் கத்தியை சூடு செய்து முதுகு, கை, கால் என பல இடங்களில் சித்தார்த் மற்றும் நித்திஷ்க்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதில் அலறித்துடித்த அவர்களிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். அண்ணன், தம்பி இருவரின் ஆண் உறுப்பிலும் சூடு வைத்துள்ளார். இதில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் சித்தார்த் தலையில் பூரி கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் காலை நித்தீஷ் வீட்டிலிருந்து செதுக்கரை பகுதியிலுள்ள பெரியம்மா மரியா மற்றும் நிஷாந்தியிடம் சென்று தன்னை சித்தி வேணி உடம்பில் சூடு வைத்ததை காட்டியுள்ளார். இதனை கண்ட அவர்கள் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட தகவல் அறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர்உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் காவல்துறையினர் விரைந்து சென்று வீட்டிலிருந்த வேணி, சித்தார்த்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்தார்த், நித்திஷ் இருவரும் தனது சித்தி செய்த கொடுமைகளையும், உடலிலுள்ள காயங்களையும் காட்டினர். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என கூறினர்.
இதையடுத்து. சிறுவர்களை கொடுமைப்படுத்திய வேணி மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 2 சிறுவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.