பரதராமி கிராமத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் முழு ஊரடங்கு
குடியாத்தம் அருகே பரதராமி கிராமத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு;
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் நேற்று 74 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வந்த பட்டியலில் பரதராமி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 34 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதனையடுத்து பரதராமி பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், பரதராமி பகுதியிலுள்ள தெருக்களை அடைக்க உத்தரவிட்டார். மேலும் அங்கு பெட்ரோல் பங்க், மருந்து கடைகளுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற கடைகள் அனைத்தும் மூட உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனர் டி.வசுமதி, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.பாரி, பி.நந்தகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி. தமிழரசன், கே.ஜெயந்தி உள்ளிட்டோர் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் கிராம பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பரதராமி பகுதியிலுள்ள தெருக்களை இரும்பு தகடுகள் கொண்டு அதிகாரிகள் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக மகளிர் குழுக்கள் மூலமாக 8 வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் பரதராமி கிராம மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பரதராமி கிராம அலுவலர் கடந்த ஆண்டு சேம்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.