உஷாருங்கோ..உஷாரு .! வேலூரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி 50க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி
பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி 50-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ் புக்கில் மர்மநபர்கள் போலி கணக்கு தொடங்கி 50-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்துள்ளனர். அதில் குடியாத்தம் மரைன் என்ஜினீயர் ரூ.90 ஆயிரத்தை இழந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள், அரசு அதிகாரிகள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என 50-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை சேகரித்து வைத்து, அவர்களுக்கு தெரியாமல் பேஸ் புக்கில் (முகநூல்) மர்மநபர்கள் போலியாக கணக்கு தொடங்கி, அதன் மூலம் நட்பு வட்டத்தில் 'ப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட்' கொடுக்கிறார்கள்.
அதன் மூலம் நண்பர்களுக்கு தனித்தனியாக பேஸ்புக் வாயிலாக தகவல் அனுப்புகிறார்கள். அதில் தங்களுக்கு அவசர தேவை என்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தை பதிவிட்டும் பண உதவி செய்யுமாறு பதிவிடுகின்றனர்.
அதை நம்பி, ஒரு சிலர் பணத்தை அனுப்பி விட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், நாங்கள் யாரிடமும் பணம் கேட்டு தகவல் அனுப்பவில்லை, எனத் தெரிவிக்கின்றனர். அப்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம், என்பது தெரிய வருகிறது. ஒரு சிலர் பணம் அனுப்புவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து கேட்டு, அது மோசடி என்று தெரிந்ததும் உஷாராகி விடுகின்றனர்.
கடந்தசில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் நகரின் பிரபல தொழில் அதிபருக்கு இதேபோல் பண கஷ்டம் எனப் பதிவிட்டு பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து அவரின் நண்பர்கள், தொழில் அதிபரின் கவனத்துக்கு தகவலை கொண்டு சென்றபோது, அது மோசடி நடவடிக்கை எனத் தெரிய வந்தது.
அதேபோல் பிரபல வழக்கறிஞருக்கும் இதேபோல் பணத் தேவை என்றும் பணத்தை அனுப்பி வைக்குமாறும் வழக்கறிஞர்போல் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அவரின் நண்பர்கள் உடனடியாக வழக்கறிஞர் கவனத்துக்கு தகவலை கொண்டு சென்றபோது, அந்த நடவடிக்கை மோசடி என தெரிய வந்தது.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மரைன் என்ஜினீயர் ஒருவர் விசாகப்பட்டினம் பகுதியில் பணியாற்றி வந்தார். அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அங்கிருந்து குடியாத்தத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் தன்னுடன் பணியாற்றும் சக மரைன் என்ஜினீயர் ஒருவர்போல் பேஸ்புக்கில் அவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றும், உடனடியாக பணm தேவை என்றும் கூறி மர்மநபர்கள் பதிவிட்டுள்ளனர்.
அதை பார்த்த குடியாத்தம் மரைன் என்ஜினீயர் தனது நண்பரை தொடர்பு கொண்டபோது, அவரின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' எனத் தகவல் வந்தது. தனது நண்பரின் குழந்தைக்கு உண்மையிலேயே உடலநலம் சரியில்லை எனக் கருதி, அவர் தனது வங்கி கணக்கில் இருந்து அந்தப் போலி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஒரு வங்கி கணக்குக்கு ரூ.90 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து மறுநாள் அவர் விசாகப்பட்டினம் நண்பரை தொடர்பு கொண்டு பேசியபோது, அதற்கு அவர் தான் இதுபோல் யாருக்கும் பணம் கேட்டு பதிவிடவில்லை, எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியாத்தம் மரைன் என்ஜினீயர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மரைன் என்ஜினீயர் அனுப்பிய ரூ.90 ஆயிரம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு சென்றது தெரிய வந்தது. இதுபோன்ற மோசடி சம்பவம் குடியாத்தம் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோரிடம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், மரைன் இன்ஜினியர் லீவில் வீட்டுக்கு வந்தது எப்படி மர்ம நபர்களுக்கு தெரிந்தது? குறிப்பாக மாரின் என்ஜினியர் போன் செய்தபோது நண்பரின் போன் ஸ்விச்ட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது எப்படி? இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே மர்மங்களும் விடுபடும்.