குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது: கைத்துப்பாக்கி, மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் பாபு என்பவரின் மகன் அபி என்ற அபிநந்தன் (வயது 22) என்பதும், வீட்டின் பின்பகுதியில் உள்ள இடத்தில் செடிகளுடன் சேர்த்து கஞ்சா செடி வளர்த்து வந்ததும் தெரியவந்தது.
கைத்துப்பாக்கி பறிமுதல்
மேலும் வீட்டில் சோதனை செய்தபோது கைத்துப்பாக்கி ஒன்றும், 2 மோட்டார் சைக்கிள்கள் உதிரிபாகங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் 3 உயர்ரக நாய் குட்டிகள் இருந்தன.
போலீசார் அபிநந்தனிடம் தீவிர விசாரணை நடத்திய போது உயர் ரக நாய்களை ஒருவருடைய வீட்டில் இருந்து திருடி வந்தது என கூறினார். இதனையடுத்து அந்த நாய்க்குட்டிகளை அதன் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பின்னர் கஞ்சா செடி, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அபிநந்தனை பரதராமி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்து அபிநந்தனிடம் கொடுத்து உதிரி பாகங்களாக பிரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அபிநந்தனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி பறவைகளை வேட்டையாடும் ஏர்கன் துப்பாக்கி ஆகும். இதுகுறித்து அபிநந்தனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.