வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி மற்றும் காப்புக் காடுகளில் மான்கள், நரிகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள் உள்ளிட்ட பறவைகளும் அதிகளவில் உள்ளன.
இதுதவிர, வேலூர் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து யானைகளும் அவ்வப்போது வேலூர் வனப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
தற்போது கோடைக்காலம் தொடங்கி, நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், வன விலங்குகள் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகி வருகிறது. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும், சமூக விரோதிகளால் கொல்லப்படுவதும் நடைபெறுகின்றன.
இதைத் தவிர்க்க, வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் இருக்கவும், வனப் பகுதிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அந்தந்த வனச் சரக ஊழியர்கள் டிராக்டர் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று, வனப்பகுதியிலுள்ள தொட்டிகளில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொட்டிகளில் நீர் இருப்பை அவ்வப்போது கண்காணித்து, வாரத்தில் ஒரு முறையாவது நீர் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் கோடைக்காலம் முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.