வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது
உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திருமண மண்டபங்களில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவு;
வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திருமண மண்டபங்களில் திருமணங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான குமரவேல் பாண்டியன் தெரிவித்து இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலூர் மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 1549 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 2-ம் கட்டமாக 929 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. குடியாத்தம், கே. வி.குப்பம், காட்பாடி ,பேரணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 9 மாவட்ட கவுன்சிலர் 88 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,154 பஞ்சாயத்து தலைவர்கள், 1302 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
9-ந் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. 5 மாவட்ட கவுன்சிலர், 50 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 93 பஞ்சாயத்து தலைவர் 777 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன. 1331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 282 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 15-ம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
தேர்தல் நடைபெறும் நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.
மாவட்ட எல்லையில் கூடுதல் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும். தேர்தல் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது என தெரிவித்தார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வேலூர் மாவட்டத்தில் பேனர் வைக்க கூடாது. அனுமதி இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது. சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது .அதிக கூட்டம் கூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான குமாரவேல் பாண்டியன் கூறினார்.