வேலூரில் டெங்கு இல்லாத நிலைமை உருவாக்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு இல்லாத நிலைமை உருவாக்க வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி பணியாளர்களிடம் கமிஷனர் கூறினார்
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் பேசிய கமிஷனர் சங்கரன் தெரிவித்தார். வேலூர் மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது. கமிஷனர் சங்கரன் தலைமை தாங்கினார். பூச்சியியல் வல்லுனர் முனிசாமி, சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார்.
இதில் கமிஷனர் சங்கரன் பேசியதாவது: டெங்கு காய்ச்சல் தடுக்க வீடு வீடாக சென்றுஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் வகையில் இருக்கும் பொருட்களை வீட்டின் உரிமையாளர்களை வைத்தே அப்புறப்படுத்துங்கள். பொது இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஆயில் பந்து வீசவேண்டும். வேலூர் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மற்ற மாநகராட்சிகளை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். டெங்கு இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் வார்டு வாரியாக பிரிந்து சென்று வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.