சாராயம் விற்பவர்கள் விவரத்தை அளிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
கிராமப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் விவரத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் குடித்து 14 பேர் இறந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சாராயத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான அவசரக் கூட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மீராபென் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் குமார், துணை வட்டாட்சியர்கள் பிரகாசம், மகேஸ்வரி, ராமலிங்கம், குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். அந்த நிகழ்வுகள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமப் பகுதிகளில் யார் யார் சாராயம் விற்கின்றார்கள், யார் காய்சுகிறார்கள், எந்தப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடக்கின்றன என்ற விவரத்தை உடனடியாக வருவாய் ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கிராம ஊராட்சிகளில் குப்பைகள் சூழ்ந்துள்ள இடத்தையும், தண்ணீர் இல்லை என்றால் நேரடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி செயலரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து குப்பைகளை அள்ளுவதற்கும், தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாத தகுதி உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு, காலியாக உள்ள இடத்தை ஆய்வு செய்து வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் 15 நாட்களுக்குள் அவர்களுக்கு வழங்க வேண்டும். எந்த மனுக்களும் நிலுவையில் இருக்கக்கூடாது என்று கூறினார்