வேலூர், ஒடுகத்தூரில் புதிய கட்டிட மொட்டை மாடியில் பச்சிளம் பெண் குழந்தை

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் புதிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது.

Update: 2021-06-02 11:17 GMT

பிறந்த குழந்தை கார்ட்டூன் படம் (மாதிரி)

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் கிடங்கு தெருவில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று காலை கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் காலை 10 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அங்கு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வேலைக்கு வந்தனர். அப்போது மொட்டை மாடியில் சுட்டெரிக்கும் வெயிலில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அனாதையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் குழந்தை அழுது கொண்டிருந்தது.

இதைப் பார்த்ததும் கட்டிடத் தொழிலாளர்கள் அருகிலிருந்த கிராம நிர்வாக அலுவலர் சரளாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அவர், இது குறித்துவட்டார மருத்துவ அலுவலர் கைலாசுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை யாருடையது? யார் இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News