அணைக்கட்டு அருகே 500-வது ஆண்டு கூத்தாண்டவர் கோவில் திருவிழா
அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெற்றது
அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் சிரசு திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அன்று முதல் மகாபாரத சொற்பொழிவும், இசைக்கவி நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. தொடர்ந்து 14-ம் நாளான நேற்று முன்தினம் இரவு புஷ்பரத தேரில் கிராம் தேவதை உற்சவர் ஊர்வலம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை கூத்தாண்டவர் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட ஆண்கள், பெண் வேடமணிந்து தாலிக்கட்டி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிற்பகல் 2 மணிக்கு மணப்பெண் ஊர்வலமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவில், உடலில் எலுமிச்சம்பழம் கோர்த்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கொக்கலிக்கட்டை ஆட்டம், மற்றும் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு 7 மணிக்கு சிரசு இறக்குதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பெண் வேடம் அணிந்து தாலி கட்டிக்கொண்ட அனைவரும் ஒப்பாரி வைத்து அழுதுக்கொண்டு தாலி கயிற்றினை கழற்றினர்.
இதனையடுத்து 8 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டு 8 -ம் நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கோவில் திறந்து காரியம் செய்யப்படும். என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஈட்டிகுமார், பிச்சாண்டி, முன்னாள்ஊராட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முரளி, முருகன், எழுமிச்சம்பழம் குத்திக்கொண்டு பா.ம.க. நிர்வாகி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் உட்பட புலிமேடு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.