பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.;
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு அணைக்கட்டு வட்டாட்சியர் கி.வேண்டா தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் பொன்முருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு வட்டாட்சியர் திருகுமரேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 6 மாதகாலமாக அனுமதி கேட்டு விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து செல்வது வேதனை அளிக்கிறது. அணைக்கட்டு தாலுகாவில் ஒரே மாதத்தில் 4 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
அனைத்து தாலுகாவிலும் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியம் இல்லாததால் விவசாயிகள் எந்த அளவிற்கு மழை பெய்தது என தெரியாமல் உள்ளனர். ஆகவே அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியம் வைக்க வேண்டும்.
இன்னும் அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் இது குறித்து வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
மலைப்பகுதிகளில் முள் இல்லா மூங்கில் மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க முடியும்.
கால்நடைத்துறை சார்பில் இந்திய ரக கறவை மாடுகளில் இனப்பெருக்கம் செய்ய அதற்கான சினை ஊசிகளை கால்நடை மருத்துவர்கள் கிராம பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஜமாபந்தி விழாவில் அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் ஜமாபந்தி விழாவில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளித்து பேசினர்.
கூட்டத்தில் விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர போவதாக விவசாயி ஒருவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.