அணைக்கட்டு அருகே தம்பதிகள் தற்கொலை: கொடுத்த கடன் திரும்ப வராததால் விபரீத முடிவு
அணைக்கட்டு அருகே தம்பதிகள் கடன் வாங்கியவர்கள், சீட்டு எடுத்தவர்கள் பணம் தராததால் தற்கொலை செய்துகொள்கிறோம் என உருக்கமான கடிதம்;

தற்கொலை செய்து கொண்ட தம்பதி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட கணவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் கடன் வாங்கியவர்கள், ஏலச்சீட்டு எடுத்தவர்கள் பணம் தராததால் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி வைத்துள்ளார் .
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா போடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி ( எ ) வரதராஜி ( 35 ) . இவர் அணைக்கட்டு போலீஸ் நிலையம் எதிரே அரிசி, தவிடு கடை வைத்திருந்தார் . கடையிலேயே ஏலச்சீட்டும் நடத்தியுள்ளார் . வரதராஜியின் முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், அணைக்கட்டு அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ஆஷா ( 23 ) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன் 2வது திருமணம் செய்து கொண்டார் . பின்னர் பெரிய ஊனை கிராமத்தில் வாடகை வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர் . இவர்களுக்கு குழந்தை இல்லை. இறந்த முதல் மனைவிக்கும் குழந்தை இல்லை. இந்நிலையில் காலை நீண்ட நேரமாக இவர்களது வீட்டுக் கதவு திறக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்து வந்த அணைக்கட்டு போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது படுக்கை அறையில் ஒரே புடவையில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சடலங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, ஒரு டைரியின் உள்ளே சிவாஜி எழுதியதாக கூறப்படும் 6 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது .
அதில் எங்கள் இறப்பிற்கு யாரும் காரணமில்லை, நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தோம். மனைவி இறந்துவிட்டதால் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளேன். வட்டிக்கு பலருக்கு பணமும் கொடுத்துள்ளேன். ஏலச்சீட்டு நடத்தி வந்தேன். எனக்கு 8 பேரிடம் இருந்து 75.28 லட்சம் வரவேண்டும் ' என்று எழுதியிருந்தார் .
மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் பெயர், செல்போன் எண், கடன் கொடுத்தது மற்றும் கடன் வாங்கியதற்கான ஆவணங்கள் எங்குள்ளது, சீட்டு பணம் கட்டியவர்கள் விவரம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் முதற்கட்ட விசாரணையில் சிவாஜியிடம் ஏலச்சீட்டு எடுத்தவர்கள் செலுத்த வேண்டிய பணம், அரிசி கடையில் கடன் வாங்கியவர் செலுத்த வேண்டிய பணம் வசூலாகாத மன வேதனை மற்றும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதியினர் இருந்தது தெரியவந்துள்ளது.
நேற்றிரவு சிவாஜி தூங்கிய பிறகு, அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்த சிவாஜியும், விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தூக்குப்போட்டுக்கொண்ட அதே புடவையிலேயே தூக்கில் தொங்கியுள்ளார் . தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது என்றனர்.