தினமும் பல நுாறு லாரிகளில் கனிம வளங்கள் கடத்தல்

தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவிற்கு பல நுாறு லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது.;

Update: 2023-05-26 07:45 GMT

தேனி மாவட்டம் தமிழகத்தின் இரண்டாவது அழகிய இயற்கை வளம் பொருத்திய மாவட்டம். இங்கு மாட்டு வண்டி, டிராக்டர்களில் மணல் கடத்தினால் கடும் குற்றம். அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு கூட பாயும். ஆனால் லாரிகளிலும், டாரஸ்களிலும் அனுமதியின்றி எவ்வளவு வேண்டுமானாலும் கடத்தலாம். கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., பொதுப்பணித்துறை என யாரும் தடுக்க மாட்டார்கள். தடுக்க கூடாது என்பது தான் சட்டமோ என்னவோ தெரியவில்லை. இது தான் இன்றைய தேனி மாவட்டத்தின் நிலை.

தேனி மாவட்டத்தில் மணல் எங்கு இருந்தாலும், தடையின்றி கேரளாவிற்கு அள்ளிச் செல்கின்றனர். அதுவும் குமுளிக்கு செல்ல, தமிழக எல்லையில் ஆறு சோதனைச்சாவடிகளை கடக்க வேண்டும். இதே போல் போடி மெட்டு, கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாகவும் சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். (இந்த சோதனைச்சாவடிகளில் பணிபுரிய விரும்புபவர்கள் கூட, தங்களது உயர் அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி, இங்கு டூட்டி போடுங்கள் என அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது. அப்படியானால் வருமானத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்).

அது சரி தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இந்த மூன்று பாதைகளின் வழியாக செல்லும் கல், மண், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை எண்ணவே முடியாது. அந்த அளவு பல நுாறு லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவி்ற்கு கடத்தப்படுகிறது. அங்கு தான் கனிம வளங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பக்கத்து மாநிலம், கடத்தலும் எளிது.

இது பற்றி எல்லாம் தெரிந்தவர்களே அமைதியாக இருக்கும் போது, விவசாயிகள் மட்டும் பதறுகின்றனர். காரணம் நாளுக்கு நாள், தேனி மாவட்டம் மெல்ல, மெல்ல பாலைவனமாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு 365 நாளில் குறைந்தது 200 நாள் மழை பெய்திருக்கும். அவ்வளவு நல்ல மழை கிடைத்தும், இன்று தேனி மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீர் மட்ட உயர் 400 அடி முதல் 500 அடிக்கு கீழே சென்று விட்டது. சில இடங்களில் ஆயிரம் அடியை கடந்தும் தண்ணீர் இல்லை. காரணம் கனிமவள திருட்டு தான். இதனை யார் தடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை என விவசாயிகள் தினமும் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.

Tags:    

Similar News