அண்ணாமலையை ‘குறி’ வைக்க உண்மையில் என்ன காரணம்?

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு எதிராக அரசியல் களத்திற்கு வந்த அத்தனை பேரும் வீழ்ந்து விட்டனர்.;

Update: 2023-10-03 01:30 GMT

பைல் படம்

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு எதிராக அரசியல் களத்திற்கு வந்த அத்தனை பேரும் வீழ்ந்து விட்டனர். பா.ஜ.க., அதிமுக கூட்டணி முறிந்தது. எடப்பாடிக்கு என்ன பிரச்னை. அண்ணாமலை வளர்ந்து விடக்கூடாது என்பது மட்டுமே உண்மையான பிரச்னை. இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே கூட்டணி தான். இவர்களுக்கு மாற்றாக அரசியலுக்கு வந்த வைகோ, விஜயகாந்த், அன்புமணி, சீமான் உட்பட அத்தனை பேரையும் வீழ்த்தி விட்டனர்.

மற்ற தலைவர்கள் எந்த வித பின்புலமும் இல்லாமல் களம் இறங்கினர். அதனால் திராவிட கட்சிகளால் எளிதில் வீழ்த்தப்பட்டனர். ஆனால் அண்ணாமலை பா.ஜ.க., என்ற அசுர அரசியல் சக்தியின் பிரதிநிதி. இவரை அழிப்பது அவ்வளவு சுலபமா? இருப்பினும் அண்ணாமலைக்கு எதிரான போராட்டம் தொடங்கி விட்டது.

எம்ஜிஆருக்கு கூட இல்லாத சவால் அண்ணாமலைக்கு உள்ளது. கருணாநிதியின் மக்கள் எதிர்ப்பை அடிப்படையாக வைத்து எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை தமிழக அரசியலில் ஒரே அரசியல் கோட்பாடு கருணாநிதி ஆதரவு, மற்றும் கருணாநிதி எதிர்ப்பு மட்டுமே. இதில் கடுமையாக இந்த பணியை புரிந்து செயல்பட்டு 30 ஆண்டுகாலம் ஆண்ட கட்சி அதிமுக. அதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற தலைவர்கள் காரணம்.

ஆனால் அண்ணாமலை க்கு வழங்கப்பட்ட பொறுப்பு மாறுபட்ட ஒன்று. 2014 ல் இந்தியா முழுவதும் மோடிக்கு ஓட்டு விழுந்து பிரதமர் ஆன போது, இங்கே தமிழகம் ஜெ தலைமையில் வேறு மாதிரியாக சிந்தித்தது. ஆனால் இந்தியாவின் நல்லகாலம் ஜெயலலிதா 37 இடம் ஜெயித்த போதும் பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்த காரணத்தால் அவரால் மத்தியில் ஒன்றும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. 37 எம்.பிக்களும் இருந்தும் பலனில்லாத ஒரு நிலை தான் காணப்பட்டது.

2011ல் ஆட்சியை இழந்த திமுக அப்போது சம்பாதித்த கெட்ட பெயர் காரணமாக 2016 லிலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க இயலாமல், எதிர்கட்சியாகவே தொடர்ந்தது. இதே நிலைமை 2019, 2021 இரண்டு தேர்தல்களிலும் தொடரக்கூடாது என திட்டம் போட்டு 2014 முதல் 2019 க்கு திட்டம் போட்டு வேலையை துவக்கியது. அந்த நேரம் ஜெ.மரணம், கலைஞர் மறைவு, என பல சூழல்கள் உருவாக தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முடியாமல், 2021ல் தி.மு.க.,விடம் பறி கொடுத்தது. இந்த நிலையில் அண்ணாமலை தமிழக பா.ஜ.க., வின் துணைத் தலைவர் ஆக அனுப்பப்பட்டார். அப்புறம் அவரது செயல்பாடுகளை வைத்து தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அவரது கடினமான பணி என்னவென்றால் தமிழக அரசியலில் தரையில் கிடக்கும் பா.ஜ.க.வுக்கு உயிர் கொடுக்கும் பணி இல்லை இது. பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட பா.ஜ.க.,வை தோண்டி எடுத்து உயிர் கொடுத்து, கட்டமைக்கப்பட்ட எதிர் வினைகளை மாற்றி, மக்கள் விரும்பும் கட்சியாக மாற்றுவது என்பது தான். இது மிக சிரமமான பணி என்பது தெரிந்து தான் ஏற்றார் அண்ணாமலை.

வழங்கப்பட்ட அந்த பணியை தனது கடும் உழைப்பாலும், அறிவுத்திறன் காரணமாகவும், திறம்பட மேற்கொண்டு வருகிறார். இங்கே திராவிட கழகங்களை சமாளிப்பது, பத்திரிக்கை களை சமாளிப்பது, சீனியர் தலைவர்களை சமாளிப்பது, தலைமையை சமாளிப்பது, கூட்டணி கட்சிகளை கையாள்வது என பல்வேறு பணிகளை தன் திறமை, கடும் உழைப்பு வாயிலாக திறம்பட கொண்டு செல்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அவரது திட்டம் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் இணைந்து போய் அவர்களிடம் பிச்சை கேட்டு 10 சீட்டு பெற்று கட்சி வளர்ப்பதல்ல என்பதை பல முறை உணரத்தியிருக்கிறார். அதே நேரத்தில் அவரது வளர்ச்சி, நடைபயணத்தில் கட்சியை ஜெட் வேகத்தில் மேலே கொண்டு செல்வதை எடப்பாடி கொஞ்சம் கூட விரும்பவில்லை.

அண்ணாமலையை பொறுத்தவரை 2026 ல் கூட்டணி கட்சி தலைவராக எந்த தடையுமில்லாமல் முதல்வர் வேட்பாளராக தி.மு.க.,விற்கு எதிரே நிற்பதே பிளான். ஆனால் எடப்பாடிக்கு அண்ணாமலை தனக்கு போட்டியாக தன் கூட்டணியில் வளர்வதை ஒரு சதவீதம் கூட விரும்பவில்லை என்பதே 100% உண்மை. 2026ல் எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க.,வும் அறிவிக்க வேண்டும் என விரும்புகிறார்.

இதற்கு நேர்எதிராக குறைந்த பட்சம் 20 சீட்டுகளை பெற்று பா.ஜ.க.,வை பெயருக்கு வளர்க்க விரும்பவில்லை. அண்ணாமலையின் வேகத்தை எடப்பாடி விரும்பவில்லை. இவை அனைத்தும் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின், எடுத்த முடிவு. அண்ணாத்துரையை பற்றி 11-9-23 அன்று பெரியகுளம், தேனியில் அண்ணாமலை பேசிய பேச்சை காரணம் காட்டி கூட்டணியை முறித்தது உண்மை காரணம் அல்ல. அண்ணாமலை அவர் பணியை தொய்வில்லாமல், கட்சியை எங்கு எடுத்து செல்ல வேண்டுமோ, அங்கு எடுத்து செல்கிறார். அவரது நடை பயணத்தில் எத்தனை வேகமாக கட்சி வளர்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு புரிகிறது.

அண்ணாமலை கூட்டணிகள் தயவில் ஐந்து சீட் ஜெயிப்பது, அதிமுகவுக்கு அடிமையாக கூனிகுறுகி நிற்பது, எதுவும் பா.ஜ.க., கட்சியை வளர்க்காது என்பதை தெளிவாக புரிந்து கொண்டார். கட்சி 2026 ல் ஆட்சியை பிடிப்பது, அல்லது பலமான எதிர்கட்சியாக நிற்பது ஒன்றே தொண்டர்களின் விருப்பம் மற்றும் அண்ணாமலையின் இலக்கு.

Tags:    

Similar News