திருவண்ணாமலை மக்களவை தொகுதி: ஒரு பார்வை
திமுக முதல் முதலாக 1957 பொதுத் தேர்தலில் பங்கேற்றபோது, திருவண்ணாமலை தொகுதியில் இரா.தர்மலிங்கம் வெற்றி பெற்றார்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 11-வது தொகுதி திருவண்ணாமலை. திருவண்ணாமலை பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்ட ஊரகப் பகுதிகள் அதிகம் உள்ள தொகுதி திருவண்ணாமலை.
திருவண்ணாமலை என்று சொன்னாலே, இந்த நகரின் மையத்தில் அமர்ந்திருக்கும் அழகிய மலையும், அதை ஒட்டி அடிவாரத்தில் உள்ள 9 உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட பழமையான அண்ணாமலையார் கோயிலும், ஆண்டுக்கொரு முறை இந்த மலையின் உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபமும் நினைவில் வந்துபோகும்.
இத் தொகுதியில் செய்யப்படும் வெற்றிகரமான தோட்டப்பயிர்களில் முக்கியமானது பூக்கள். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சம்பங்கி, சாமந்தி, முல்லை, மல்லிகை போன்ற மலர்களை வணிக ரீதியில் அனுப்புவது திருவண்ணாமலை பகுதியில் உள்ள பூந்தோட்டங்களே.
தோட்டப்பயிர்கள் நம்பிக்கை கொடுத்தாலும், முக்கிய உணவு மற்றும் பணப் பயிர்களின் சாகுபடியில் ஏற்பட்ட நெருக்கடியை இவற்றால் ஈடுகட்ட முடியவில்லை. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து பெங்களூரூ, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் வேறு பல பகுதிகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.
தலித், வன்னியர்கள், முதலியார்கள், யாதவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இத்தொகுதியில் உள்ளனர். 1957, 1962 தேர்தல்களில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி இருந்தது. பிறகு, இத்தொகுதி ஒழிக்கப்பட்டது. அப்போது திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் முதலில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியிலும், பிறகு திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றிருந்தன.
தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. தொகுதி மறுசீரமைப்பின் போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அந்த தொகுதியில் இருந்து சில தொகுதிகளையும், வந்தவாசி தொகுதியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தொகுதி மறுவரையறையில் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக-வின் முக்கியத் தலைவராகவும் விளங்கிய ஜெ.குரு-வும், திமுக-வில் திருப்பத்தூர் மக்களவை உறுப்பினராக நான்கு முறை இருந்தவரான த.வேணுகோபாலும் போட்டியிட்டனர். தமிழக அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 1.48 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெ.குரு படுதோல்வி அடைந்தார்.
இதற்கு முன்பே இத்தொகுதிக்கு ஓர் அரசியல் முக்கியத்துவம் உண்டு. 1949-ல் தொடங்கப்பட்ட திமுக முதல் முதலாக 1957 பொதுத் தேர்தலில் பங்கேற்றபோது, இரண்டு மக்களவைத் தொகுதிகளை வென்றது. திருவண்ணாமலையில் இரா.தர்மலிங்கமும், நாமக்கல்லில் ஈ.வெ.கி.சம்பத்தும் வெற்றி பெற்றனர். அப்போது திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை என்பதால், சுயேச்சை சின்னத்தில் நின்றே இவர்கள் வெற்றி பெற்றனர்.