மரபணு மாற்று கடுகு விதை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
மரபணு மாற்று கடுகு விதை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் இணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் எதிரில் தேசிய பாதுகாப்பான உணவு தினமான நேற்று மரபணு மாற்று கடுகுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் இணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமை வகித்து பேசுகையில் கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுக் கடுகு விதைகளை அனுமதிக்க கூடாது.
இயற்கைக்கு எதிரான மனித இனத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய மரபணுமாற்று கடுகை தடை செய்ய வேண்டும், அனைத்துவிதமான களைக்கொல்லி மற்றும் பூச்சிகொல்லிகளை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்,
செயற்கையாக செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மாற்றாக ஊட்டச் சத்துமிக்க பாரம்பரிய அரிசி ரகங்களை வழங்க வேண்டும், அதிகரித்துள்ள உணவு கலப்படத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை அமல்படுத்த வேண்டும் ,
செயற்கையாக செரியூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மாறாக ஊட்டச்சத்து மிக்க மரபுரக அரிசி மற்றும் சிறு தானியங்களை வழங்க வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிர்கள் களைக்கொல்லிகளை தாங்கி வளரக்கூடிய வையாகும் எனவே இப்பயிர்களின் மீது தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் மக்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலசப்பாக்கம் ராஜேந்திரன், மீனாட்சி சுந்தரம், தேவிகாபுரம் பிரகலாதன், உமாசங்கர் ,போளூர் தணிகை மலை, லெனின், அன்பரசு, மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு உறுப்பினர்கள் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள், திருவண்ணாமலை போளூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல விவசாயிகள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.