தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
போளூரில் தான் படித்த அரசு பள்ளி புனரமைப்பு பணிக்காக ரூ.10 லட்சத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.
போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இப்பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படித்தார். அவரது தந்தை போளூரில் உள்ள சங்கர வேத பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்தார். அப்போது இவர் தந்தையிடம் வேதம் பயின்றார். அந்த கால கட்டத்தில் இவருக்கு காஞ்சி மடத்தில் இருந்து அழைப்பு வந்து,அங்கு சென்றார். அவருக்கு பால பெரியவா பட்டம் வழங்கப்பட்டது.
தான் படித்த பள்ளி புனரமைப்பு பணிக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். வினோத் குமார் ஜெயின் தலைமையில் பள்ளி நூற்றாண்டு குழு நிர்வாகிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்துக்கு சென்று காசோலையை பெற்றுக்கொண்டனர்.