திருவண்ணாமலை அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
போளூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது நண்பர் பிரபாகரன் என்பவரை தனது சொந்த ஊரான போளூர் அருகே உள்ள முறையூர் கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தார்.
இந்நிலையில் காலை மொடையூர் ஏரியில் மீன் வாங்கி வருவதற்காக வெங்கடேசனுக்கு சொந்தமான ஆட்டோவில் பிரபாகரன் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சின்னகுழந்தை ஆகிய 3 பேரும் சென்றனர்.
வெங்கடேசன் ஆட்டோவை ஓட்டினார்.அங்கு மீன் கிடைக்காததால் மீண்டும் மொடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலை வளைவில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியும்,ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னகுழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
படுகாயம் அடைந்த வெங்கடேசன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போளூர் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
7 போ் காயம்
சிதம்பரத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே குழந்தை ஒன்று வந்ததால், குழந்தை மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த கரும்பு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 பேர் லேசான காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.