மரப்பயிர் சாகுபடி பயிற்சி கருத்தரங்கு!
சேத்துப்பட்டில் மரப்பயிர் சாகுபடி பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது
சேத்துப்பட்டில் நடைபெற்ற மரப்பயிர் சாகுபடி பயிற்சி கருத்தரங்கில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
சேத்துப்பட்டு அடுத்த, தென் கடப்பந்தாங்கல் கிராமத்தில், காவேரி குரல் சார்பில் மரப்பயிர் சாகுபடி பயிற்சி கருத்தரங்கு நடைப்பெற்றது. சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
பயிற்சியில் இயற்கை விவசாய பண்ணையின் உரிமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னோடி மரப் பயிர் விவசாயி மோகனகிருஷணன், நாராயணன், பாஸ்கரன், செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டு, பல அடுக்கு பல பயிர் சாகுபடி முறையின் நன்மைகள் குறித்தும், விவசாய விளைப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவது குறித்தும் தங்கள் அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்கினர்.
முன்னோடி மரப் பயிர் விவசாயி செந்தில்நாதன் பேசுகையில்: “மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறிய பிறகு, என்னுடைய தென்னை மரங்களில் காய்ப்பு அதிகரித்துள்ளது. காயின் எடையும் கூடியுள்ளது. மேலும், மண்ணின் வளமும் அதிகரித்துள்ளது. இதனால், சூழலியல் மற்றும் பொருளாதார ரீதியாக பல பலன்கள் எனக்கு கிடைத்துள்ளது” என்றார்.
அதேபோல், டிம்பர் மரங்கள் சாகுபடியானது, விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாகவும் இருப்பதால், மரம் சார்ந்த விவசாயம் செய்வது அவசியமாகிறது. எந்தப் பயிர்களை சாகுபடி செய்தாலும், வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் 80 முதல் 100 டிம்பர் மரங்களை நட இயலும். நிலம் முழுவதும் நடவு செய்தால் ஏக்கருக்கு 250 மரங்கள் வரை நட முடியும்.
தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற மரக்கன்றுகள், 20 -25 ஆண்டுகளில் வளர்ந்த பின், நல்ல விலைக்கு விற்க முடியும். கூடுதல் வருமானத்திற்கு மிளகு சாகுபடியும் செய்யலாம். மரம் நடவு செய்து 3 ஆண்டுகளில் மிளகு கன்றுகளை மரத்தில் ஏற்ற முடியும். இதனால் விவசாயிகள் வருடந்தோறும் வருமானம் பெற முடியும் என ஆலோசனை வழங்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வுசெய்து, அதை நடும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள், பண்ணை முழுவதையும் நேரில் பார்வையிட்டு, தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை, முன்னோடி விவசாயிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.
மர விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவேரி கூக்குரல் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நாற்றுப் பண்ணைகளில், விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு குறைந்த விலையில் டிம்பர் மற்றும் 20க்கும் மேற்பட்ட வகை மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளின் நிலத்திற்கு, காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள் நேரடியாக சென்று மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க ஆலோசனைகளும் வழங்குவார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.