சாராய ஊறல் அழிப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

ஜமுனாமரத்தூர் பகுதியில் கலால் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

Update: 2023-03-22 09:58 GMT

கலால் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கள்ளச்சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியில் கலால் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்ராஜிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போளூர் கலால் இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் ஜமுனாமரத்துர் அடுத்த நெல்வாசல் கிராமம் கிழக்கு ஓடை அருகே உள்ள என்ற இடத்தில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேரல்களில் இருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம், அங்கிருந்த சாராய அடுப்புகள், பாத்திரங்கள், வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இடத்தில் சாராயம் காய்ச்சும் கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதுபோல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

2 வாலிபர்கள் கைது

கண்ணமங்கலம் அடுத்த படவேடு கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ் (25), சத்தியசீலன் (21). இவர்கள் 2 பேரும் படவேடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியபோது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போளூர் ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

ஏ.டி.எம். கார்டை மாற்றி துணிகரம்

கண்ணமங்கலம் அருகே உள்ள புத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (வயது 59). இவர், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுக்க தெரியாததால், ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாலிபரிடம் பணம் எடுக்க சொல்லி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு,

அவர் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை அஞ்சலிதேவியிடம் கொடுத்துள்ளார். இதனை கவனிக்காத அவர் அந்த கார்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டார். பின்னர் அஞ்சலிதேவியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அஞ்சலிதேவி தான் வைத்திருந்த ஏ.டி. எம். கார்டுடன் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று கிளை மேலாளரிடம் இதுபற்றி தெரிவித்தார். அப்போது அவர் வைத்திருந்தது உங்களுடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News