8 பேர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
போளூர் அருகே போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 5 பேர் கைது உள்ளிட்ட கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே போலீசார் நடத்திய சாராய வேட்டையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்ட அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் தலைமையில் போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கலையரசி மற்றும் காவலர்கள் நடத்திய தீவிர சாராய தேடுதல் வேட்டையில் ஆரணி சுற்றுப்பகுதியில் உள்ள திட்ட குடிசை, வாழியூர் , மேல்நகர் , வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் சாராய வேட்டை நடத்தியதில் 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1320 மது பாட்டில்களை ஆற்றங்கரை அருகே கொட்டி அழித்தனர்.
தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள அள்ளிக்கொண்ட பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். அவரது மகன் ஜார்ஜ் , தொழிலாளி. இவருக்கும், நரியாபட்டு பகுதியை சேர்ந்த குணா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குணாவிற்கு ஆதரவாக நரியாபட்டு பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் சந்துரு , மணி மகன் பாரதி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து ஜார்ஜை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சந்துரு, பாரதி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிறுவன் தவிர மற்ற இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.