சிறையில் இருந்து வந்தவரை, மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்ற போலீசார்
சேத்துப்பட்டு பகுதியில் பல இடங்களில் திருடியவர் 2-வது மனைவியை சந்திக்க வந்தபோது போலீசார் கைது செய்தனர்
சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கபுரம் மதுரா கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். . விவசாயி இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் அதே ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் நடந்த நாடகத்திற்கு சென்றார்.
நாடகம் முடிந்ததும் விடியற்காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் கூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த ஒரு பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தேவிகாபுரம் நாவிதர் தெருவை சேர்ந்த சுதாகர் என்பவர் தனது 2-வது மனைவி கவிதாவை சந்திக்க வந்தார். அப்போது தேவிகாபுரம் பஜாரில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் சுதாகர் பதுங்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தேவிகாபுரம் நாவிதர் தெருவை சேர்ந்த சாரங்கன் மகன் சுதாகர். . என தெரியவந்தது. மேலும் இவரை போலீசார் சோதனை செய்ததில் சில்லறை நகையாக ஒரு பவுன் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் பறிமுதல் செய்து சுதாகரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினர்.
அப்போது நரசிங்கபுரம் மதுரா கன்னிகாபுரம் கிராமத்தில் பூட்டிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை திருடியதையும் மேலும் சேத்துப்பட்டில் கடந்த 2019 ம் ஆண்டில் காதர்மொய்தீன் வீட்டில் சுமார் 22 பவுன் நகை திருடியதையும் சுதாகர் ஒப்பு கொண்டார்.
அதில் 7 பவுன் நகைகளை சென்னை பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் தன்னுடைய சகோதரி சாரதாவிடம் கொடுத்துள்ளதாக சுதாகர் தெரிவித்தார்.
இவர் மீது ஏற்கனவே சென்னை ஆவடி, செங்கல்பட்டு, போளூர், திருப்பூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷனகளில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. சமீபத்தில்தான் சுதாகர் சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் சுதாகரை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.