மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது
சேத்துப்பட்டு அரசு பள்ளியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.;
சேத்துப்பட்டு அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி தலைமறைவான பகுதி நேர ஆசிரியரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை தாக்கிய 6 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிபவர் தனக்கரசு, இப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பில் மாணவி ஒருவர், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில், அவருக்கு டிசி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பகுதி நேர ஆசிரியர் தனக்கரசு அந்த மாணவியை போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய். உடனே வீட்டுக்கு வா என்று பேசினாராம். அந்த மாணவியும் சார் நான் டிசி வாங்கப் போறேன் நான் ஏன் வீட்டிற்கு வர வேண்டும் என கேட்டாராம் .இந்த ஆடியோ சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு வந்த செல்போன் உரையாடலை வைத்து, சில இளைஞர்கள் ஆசிரியர் தனக்கரசை தனியாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். அதற்கு அந்த ஆசிரியர், 'போதையில் அந்த மாணவியிடம் ஏதோ பேசி விட்டேன்' என கூறினார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதற்கிடையில் ஆசிரியர் தனக்கரசு தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் திருவண்ணாமலை எஸ்பி பிரபாகரன் உத்தரவின்பேரில் சேத்துப்பட்டு டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர் கார்த்திகாதேவி, எஸ்ஐக்கள் நாராயணன், சிவகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் பதுங்கியிருந்த ஆசிரியர் தனக்கரசுவை நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. மேலும், ஆசிரியரை தாக்கிய 6 வாலிபர்கள் மீது வழக்குப்பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்ட போது, தனக்கரசு 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.