பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
பட்டா பெயர் மாற்றம் செய்ய 5000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிக்கு பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நில அளவையரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவா் சகாதேவன், இவருடைய எதிா் வீட்டில் வசிக்கும் உறவினா் ஹரிகிருஷ்ணன், கடந்த 2023-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சௌபாக்கியம் என்பவரிடம் நிலம் கிரையம் பெற்றுள்ளாா். இந்த நிலத்தில் சில உள்பிரிவுகள் செய்யாமல் கூட்டு பட்டாவாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டா மாற்றம் செய்ய ஹரிகிருஷ்ணன் நில அளவையரிடம் மனு கொடுத்து அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சகாதேவனிடம், ஹரிகிருஷ்ணன் கூறியுள்ளாா். இதனால், அவரும் சில தினங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்று நிலஅளவையா் தீனதயாளனை சந்தித்து கேட்டபோது, கிரையம் பெற்ற நிலத்தில் மொத்தம் மூன்று பெயா் பட்டா மாற்றத்துக்கு நான்காயிரம் விதம் ரூ. 12 ஆயிரம் தரவேண்டும் எனக் கூறினாராம்.
இதற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால், ரூ.10 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் என்று நில அளவையா் கூறினாராம். இதை ஏற்றுக் கொண்ட அவா்கள் ரூ. 5 ஆயிரம் முன்பணமாக தருகிறோம், பட்டா பெயா் மாற்றம் செய்த பிறகு மீதித் தொகையை தருகிறோம் என்று கூறிவிட்டு வந்துள்ளனர்.
இது சம்பந்தமாக சகாதேவன் கடந்த செவ்வாய் கிழமை மாலை திருவண்ணாமலை விஜிலென்ஸ் அலுவலகம் வந்து டிஎஸ்பி வேல்முருகனிடம் நடந்த சம்பவங்களை கூறி புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட விஜிலன்ஸ் அதிகாரிகள் நேற்று காலை சுமார் 12.30 மணி அளவில் சகாதேவன் சர்வேயர் தீன தயாளனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் தீன தயாளனை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாலுக்கா அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் புலிக்கு வைத்த வலையில் சுண்டெலி தான் சிக்கி உள்ளது என கிண்டல் அடித்துக் கொண்டு சென்றனர். இந்த கிண்டலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் விஜிலன்ஸ் அதிகாரிகள் விழித்தனர்.