நாராயணமங்கலம் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோயில் தேரோட்டம்

போளூா் நாராயணமங்கலம் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-13 02:48 GMT

ஸ்ரீ காளியம்மன் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்துள்ள நாராயணமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு கடந்த ஜூன் 9-ஆம் தேதி காப்புகட்டுதல், பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. ஜூன் 11-ஆம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, கூழ் வார்த்தல் நடைபெற்றது.

இந்நிலையில் நிகழ்வின் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழாவானது நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது

நேற்று மாலையில் உற்சவருக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து, பக்தா்கள் தேரே வடம்பிடித்து இழுத்தனா். தேரானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பின்னா், நிலையை அடைந்தது.

விழாவில், நாராயணமங்கலம், கிருஷ்ணாபுரம், போளூா் ,சந்தவாசல், காங்கிரனந்தல், களம்பூா், ஏரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வாச்சனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூன் 9 -ஆம் தேதி கோயில் அருகே யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, புண்யாகவாசனம், அங்குராா்ப்பணம், விசேஷசந்தி, பூா்ணாஹூதி, தீபாராதனையுடன் முதல் கால யாக பூஜையும், ஜூன் 10-ஆம் தேதி இரண்டாம் கால பூஜைகளும், மாலை மூன்றாம் கால பூஜையும், ஜூன் 11-ஆம் தேதி காலை நான்காம் கால பூஜையும், மாலை ஐந்தாம் கால பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை காலை ஆறாம் கால புஜை தொடங்கி லஷ்மி கணபதி பூஜை, பா்ஜந்யாராதானம், க்ரகப்ரீதி, அக்னிகாரிய ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி கோயிலை சுற்றி வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, கருவறையில் உள்ள ஸ்ரீஅகதீஸ்வரா், அகிலாண்டீஸ்வரி, காசி விஸ்வநாதா், விநாயகா், சுப்பிரமணியா் உள்ளிட்ட சுவாமிகள் மீது புனித நீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து, அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

விழாவில், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News