சேத்துப்பட்டு அருகே வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தல்

சேத்துப்பட்டு அருகே செம்மரங்கள் கடத்தப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-23 03:26 GMT

அடியோடு வெட்டப்பட்ட செம்மரங்கள்

ஆந்திரா மாநிலம் திருப்பதியைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் செம்மர கடத்தினால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள முடையூா் குன்றின் மீது சுமார் 25 செம்மரங்களை வெட்டி செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழிலுக்கு குறைவே இல்லாத பகுதியாக விளங்குவது ஜமுனா மரத்தூர் பகுதியாகும்.

ஒரு காலத்தில் இங்கு தான் சந்தன மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதாம். பலத்த காற்று வீசும் போது பல கிலோமீட்டர் தூரத்திற்கு சந்தன மரத்திலிருந்து சந்தன நறுமணம் வீசுமாம்.

தற்போது அதற்கு உண்டான அறிகுறியே இல்லை. அனைத்து மரங்களும் மரம் கடத்துபவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.

தற்போது ஜமுனா மரத்தூர், ஜவ்வாது மலையின் தொடர்ச்சியாக உள்ள சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மொடையூர், பெரணம்பாக்கம், வட விளாம்பாக்கம், தேவிகாபுரம், தச்சூர் ஆகிய கிராமங்களை ஒட்டி உள்ள குன்றுகள் என பல்வேறு பகுதியில் வனத்துறை சார்பில் செம்மரங்கள் நடப்பட்டு தற்போது பெரிய மரங்களாக வளர்ந்துள்ளது.

இதன் மதிப்பு பல லட்சங்கள் ஆகும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போளூர் தாலுகா முடையூர் குன்றின் மீது வனத்துறை சார்பில் சுமார் 1500 செம்மரங்கள் நடப்பட்டு பெரிய அளவில் வைரம் வாய்ந்த மரங்களாக வளர்ந்து காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் செம்மர கடத்தல் கும்பலால் சுமார் 25க்கும் மேற்பட்ட பெரிய அளவு கொண்ட வைரம் பாய்ந்த செம்மரங்களை இயந்திரம் மெஷின் மூலம் அடியோடு அறுத்து அதனை துண்டு துண்டாக அறுத்து கடத்தி சென்றுள்ளனராம்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தகவல் அறிந்து குன்றின் மீது சென்று பார்த்த போது பெரிய அளவிலான செம்மரங்கள் அடியோடு அறுக்கப்பட்டு அதனை துண்டு துண்டாக்கி கடத்தல் கும்பல் கடத்திச் சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து கடந்த ஒரு வாரமாக தடயங்களை சேகரித்து அடையாளம் தெரியாத கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.

அடியோடு அறுக்கப்பட்ட செம்மரங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பெயிண்ட் மூலம் ஒன்று இரண்டு என வரிசை எண்கள் எழுதியுள்ளனர்.

இது குறித்து சில வன காவலர்களிடம் கேட்டபோது, சிறிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என தெரிவித்தனர். ஆனால் உள்ளே சென்று பார்த்த போது பெரிய அளவிலான செம்மரங்கள் அடியோடு வெட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், செம்மரங்கள் அடிக்கடி வெட்டி கடத்திச் செல்வது வாடிக்கையாக விட்டது.

இரவு நேரங்களில் இந்த வனப்பகுதியில் வன காவலர்கள் தங்கி பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தற்போது எந்த வன காவலரும் இங்கு வந்து தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மரங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மொடையூர் குன்றின் மீது உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தி சென்ற கடத்தல் கும்பலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும், மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் வன காவலர்களை அதிகளவில் தங்க வைக்க வேண்டும், அவர்களுக்கு நவீன தற்காப்பு இயந்திரங்கள் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News