சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை: அரசுப்பள்ளி ஆசிரியர் கைது- பணியிடை நீக்கம்
அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்;
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டுப் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த யுகேஜி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளித் தாளாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் தாளாளராக உள்ள பிரபாவதியின், கணவர் காமராஜ் என்பவர் சேத்துப்பட்டு அடுத்த உலகம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காமராஜ் அவ்வப்பொழுது தனது மனைவி பிரபாவதி நடத்திவரும் ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு வருவதை வழக்கமாக தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் காமராஜ் பள்ளியில் படிக்கும் நான்கரை வயதுள்ள யுகேஜி மாணவியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை பள்ளியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் மறுநாள் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு காமராஜ் மீண்டும் பாலியல் தொல்லை தந்துள்ளார்.
வீட்டிற்கு சென்ற மாணவி அழுதபடி இருந்துள்ளார். திடீரென மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் பெற்றோர் சிறுமியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர்.அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோர் இன்று பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய வீடியோவை சேகரித்து சிறுமியை அழைத்து பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குரூப் போட்டோவை காண்பித்து இதில் யார் சாக்லேட் கொடுத்து வன்கொடுமை செய்தார்கள் என்று கேட்டனர். அப்போது பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பவரின் புகைப்படத்தை காண்பித்து இவர்தான் என்னை புத்தக அறைக்கு அழைத்து சென்று சாக்லேட் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
இதனடிப்படையில் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை தேடிய நிலையில், அவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றதாக தகவல் வந்தது. இதையடுத்து, காமராஜ் சென்ற காரின் பதிவு எண் கொடுத்து கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து திரும்பிவரும் வழியில் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் காமராஜை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வருகின்றனர்.இந்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.
இது குறித்து மாவடட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில், பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, காவல்துறை துரிதமாக செயல்பட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய வழியில் எட்டயபுரத்தில் வைத்து, அரசுப்பள்ளி ஆசிரியர் காமராஜ் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் முதற்கட்டமாக குழந்தைக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் குழந்தையின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் குழந்தைக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டாலும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் எனவும், இதுபோன்ற குற்றங்களில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்