போளூர் பகுதிகளில் ரூ. 2 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

Update: 2021-08-31 08:00 GMT

போளூர் பகுதியில் நடைபெற்றுவரும் தார் சாலை பணிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. போளூர் நகரில் டைவர்ஷன் மெயின் ரோடு சுமார் இரண்டு கிலோ மீட்டர் சாலை  உள்ளூர்  நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது.

பைபாஸ் சாலை தொடங்கப்பட்ட பிறகு உள்ளூர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை சரியான பராமரிப்பு செய்யப்படாமல் குண்டு குழியுமாக மாறி மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வே மேம்பால கட்டுமான பணி நடந்து வருவதால் அந்த பணி முடிந்த பிறகு புதிய சாலை அமைக்கலாம் என உள்ளூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர்.

ஆனால் பொதுமக்கள் மற்றும் திருவண்ணாமலை வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியர் இடமும் பலமுறை மனு அளித்திருந்தனர். இந்நிலையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி பைபாஸ் சாலை தொடக்கப் பகுதியில் இருந்து போளூர் திருவண்ணாமலை செல்லும் சாலை வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 2 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. போளூர் உதவி பொறியாளர் நித்தின் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் இந்த தார்சாலை பணியை திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் முரளி உதவி கோட்ட பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News