போளூரில் விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்: 16 பேர் மருத்துவமனையில் அனுமதி

போளூரில் வெறிநாய் கடித்ததில் காயம் அடைந்த 16 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-01-22 01:55 GMT

நாய் கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நேற்று மதியம் முதல் வெறி நாய் ஒன்று அனைவரையும் கடித்துக் கொண்டு வந்தது.

காலையில் இருந்து ஒன்று இரண்டு பேராக அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் மாலைக்கு மேல் தொடர்ந்து வர ஆரம்பித்தனர் . இரவு 7 மணி அளவில்  16 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

போளூர் பஜார் வீரப்பன் தெரு, ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள இடங்களில் நாய் கடித்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சப்பட துவங்கியுள்ளனர்.

வெளியூருக்கு வேலைக்கு சென்று திரும்புபவர்களிடம் வரும்போது எச்சரிக்கையாக வருமாறு வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்ப ஆரம்பித்தனர்.

தொடர்ந்து நாய் கடிகள் குறித்த செய்திகள் தொடர்ந்து வரவே பேரூராட்சி நிர்வாகம் நேற்று மாலை நாய்களை பிடிக்க பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளனர் . பணியாளர்கள் நாயினை பிடிக்க தேடுதல் வேட்டையை இன்று அதிகாலையிலேயே தொடங்கியுள்ளனர். போளூர் பேரூராட்சியினர் மற்றும் பொதுமக்கள் அந்த வெறி நாயை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணைத்தலைவர் எவரெஸ்ட் சாந்தி நடராஜன், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அதிகாரி மலைமாறன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர்

மருத்துவமனையில் நாய் கடிக்கான மருந்துகள் கையிருப்பில் இருந்ததால் உடனடியாக அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது என மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

போளூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News