திருவண்ணாமலை மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-10-01 01:20 GMT

திருவீதி உலா வந்த வேணுகோபால சுவாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால், பக்தர்கள் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம்  ஜவ்வாது மலைத்தொடரில் படவேடு ஒன்றியத்தில் உள்ள கோட்டை மலையில் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது . இக்கோயில் சனிக்கிழமை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும். இந்த மலையின் உயரம் 2164 அடி உயரம் ஆகும்.

நேற்று இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்து பெருமாள் தரிசனம் செய்தனர்.   நேற்று அதிகாலை பெருமாளுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில்  ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபால சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் உள்ள வேணுகோபால பெருமாளுக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் அமைந்துள்ள பழமையான பூதநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூத நாராயண பெருமாளுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

சேத்துப்பட்டு சாலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள ராமச்சந்திர பெருமாள் ஆலயத்திலும், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதல் இரவு வரை பஜனை கோஷ்டியினரின் பக்தி சொற்பொழிவு, பஜனை பாடல்கள் நடந்தது. சேவூரில் உள்ள பெருமாள் கோவில், எஸ்.வி.நகரத்தில் உள்ள பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News