தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சங்கத்தின் வட்டாரத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜோதி வரவேற்றாா். மாவட்டச் செயலா் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசுகையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் சிலருக்கு ரூ.2ஆயிரம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறையில் கேட்டபோது அதிகாரிகள் சரிவர பதிலளிக்கவில்லை.
மணிலா, உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு முறையாக வழங்குவதில்லை. ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்றாா். மாவட்டத் தலைவா் ட.வெங்கடேசன், மாவட்டக் குழு திருமுருகன், ஒன்றியச் செயலா் சிவக்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு பூமி பூஜை:
போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் கலந்து கொண்டார். மேலும் கல்பட்டு கிராமத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். புதிதாக கட்டப்படும் பள்ளி கட்டிடம், புதிய ரேஷன் கடை ஆகியவைகளை பார்வையிட்டார். ஊராட்சிக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி லட்சுமி என்ஜினீயர் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு காவல் துறையில் ஓரு அங்கமாக ஊர்க்காவல் படை இயங்கி வருகிறது. வருகிற மே மாதம் 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை தமிழ்நாடு அளவில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று திருவண்ணாமலைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை தலைமை இயக்குனர் ரவி தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், ஊர்க்காவல் படையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.