சொத்து தகராறு; தந்தையை கொலை செய்த மகன் கைது
சொத்து தகராறில் பாகப்பிரிவினை செய்து தரக்கோரி தந்தையை காலால் மிதித்து, சுவரில் மோதி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
தந்தையை கொன்ற மகன் கைது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் தாஸ் (வயது 59). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு தன்ராஜ் (30), தங்கராஜ் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளை வேலூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன்கள் இருவரும் தந்தையிடம் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டு தகராறு செய்து வந்தனர். நேற்று இரவு இதே பிரச்சனையை வலியுறுத்தி 2-வது மகன் தங்கராஜ் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தந்தை தாசை காலால் எட்டி உதைத்தார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அவர் தலையை பிடித்து சுவரில் இடித்தார். இதில் தாஸ் துடிதுடித்தபடி அலறி கீழே விழுந்ததில் அதே இடத்தில் இறந்து விட்டார்.உடலை பார்த்து தவமணி கதறி அழுதார். தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்ெபக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் விரைந்து சென்று தாஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மனைவி தவமணி புகார் அளித்தார். அதன்பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகப்பிரிவினை தகராறில் பெற்ற மகனே, தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காட்டு பன்றி இறைச்சியுடன் வந்த 3 பேர் கைது
காட்டு பன்றி இறைச்சியுடன் வந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். செங்கம் சுற்று வட்ட பகுதியில் உள்ள காடுகளில் மான், முயல், காட்டுப்பன்றி, மயில் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இங்குள்ள காப்பு காடுகளில் கள்ளதுப்பாக்கி உள்பட ஆயுதங்களுடன் சிலர் வேட்டைக்கு சென்று வருவதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் மேல்ராவந்தவாடி பகுதியில் காட்டுப் பன்றி இறைச்சியுடன் சிலர் வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வனத்துறையினர் மேல்ராவநற்தவாடி காட்டுப் பகுதி வழியானக வந்தவர்களை சோதனையிட தொடங்கினர். அப்போது பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 28), கட்டமடுவு பகுதியை சேர்ந்த கரிகாலன் (32), அய்யப்பன் (33) ஆகியோர் காட்டுப்பன்றி இறைச்சியுடன் வந்தபோது, வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி திண்டிவனம் தாசில்தார் உயிரிழந்தார்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா லட்சுமிபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (வயது 52). இவர் திண்டிவனத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
வெங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை (48), மகன் சிவசங்கரன் (21) ஆகிய 3 பேரும் நேற்று காலை காரில் காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி -காஞ்சீபுரம் சாலையில் செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராம கூட்ரோடு அருகே இரவு 10 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது காஞ்சீபுரம் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரில் பயணம செய்த வெங்கடசுப்பிரமணியன், தலை, முகம் ஆகிய பகுதியில் படுகாயம் ஏற்பட்டு, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவரது மனைவி பூங்கோதை, மகன் சிவசங்கரன் ஆகியோரர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெங்கடசுப்பிரமணியனின் உறவினர் விக்னேஸ்வரன் அனக்காவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.