வேளாண் திட்ட பணிகள்: அரசின் முதன்மை செயலாளர் ஆய்வு

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண் திட்ட பணிகளை அரசின் முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-10-23 03:00 GMT

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அரசின் முதன்மை செயலாளர் தீரஜ் குமார் உடன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும் திருவண்ணாமலை மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு அதன் தொடர்ச்சியாக போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை அரசின் முதன்மைச் செயலரும், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப்பிறகு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில், 

நமது மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு பல்வேறு அரசு திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திண்டிவனம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி குழுக்கள் மூலம் தரிசு நிலங்களை மேம்படுத்துதல் குழுக்கள் மூலம் 15 நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் ஊடுபயிர்கள் மா, எலுமிச்சை கருவேப்பிலை மற்றும் மணிலா சிறப்பான முறையில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் நல்ல லாபத்தையும் மசூலையும் பெற்று வருகின்றனர்.

தரிசு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நமது மாவட்டத்தில் பயிர் செய்ய 200 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் நெல் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர் வகைக்கு அதிகளவில் தண்ணீர் வசதி தேவைப்படுகிறது. ஒரு சில காலகட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே மாற்றுப் பயிர் பயிர்களான மணிலா மற்றும் சிறுதானிய வகை பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும். நீா் பற்றாக்குறை உள்ள தரிசு நிலங்களில் அரசு சாா்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீா்பாசன வசதி செய்து தரப்படும் எனக் கூறினாா்

திண்டிவனம் ஊராட்சியில் சொட்டு நீா்ப்பாசனம் மூலம் கொய்யா, நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த அரசின் முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்று, விசைத்தெளிப்பான், விவசாயக் கருவிகள் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், உதவி இயக்குநா் பிரதாப்சிங், ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலா, வேளாண்மை துணை இயக்குநா்கள் வடமலை, சத்தியமூா்த்தி, தோட்டக் கலைத் துறை வேளாண்மை உதவி இயக்குநா்கள் லோகேஷ், சவீதா, வேளாண்மை உதவி அலுவலா் ராமு, ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News