ஜவ்வாது மலை அடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள்.. முழுமையாக அழித்த போலீஸார்…

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைக் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டறிந்து போலீஸார் அழித்தனர்.

Update: 2022-12-20 01:16 GMT

கஞ்சா செடிகளை அழிக்கும் பணியில் போலீஸார்.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் மேற்கொள்ளும் வாகன தணிக்கையின்போது வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகவும், அதன் மூலம் கிடைக்கப்படும் கஞ்சா போதைப் பொருளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாது மலையடிவாரத்தில் தனிநபர் ஒருவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உரிய விசாரணை மேற்கொள்ளும்படி, போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். போளூர் அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் ஜமுனாமரத்தூர் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்குள்ள மலைகிராமத்தில் சங்கர் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் 30 கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த தோட்டத்திற்கு சென்ற போலீஸார் 30 கஞ்சா செடிகளையும் கண்டறிந்து முற்றிலுமாக அழித்தனர். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சங்கர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கஞ்சா செடிகள் வளர்க்க தடை உள்ளதால், தனிநபர்கள் யாரேனும் தங்களது வீடுகளிலோ, தோட்டங்களிலோ கஞ்சா செடி வளர்ப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்

Tags:    

Similar News