பிளஸ் 2 ரிசல்ட் : 35 வது இடத்தை பிடித்த திருவண்ணாமலை மாவட்டம்
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 37-வது இடத்தில் இருந்து 2 மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி 35-வது இடத்தை பிடித்துள்ளது.;
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் நேற்று காலை பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 536 மாணவர்களும், 14 ஆயிரத்து 329 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 865 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினர்.
நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 11 ஆயிரத்து 554 மாணவர்களும், 13 ஆயிரத்து 468 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 22 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.80 சதவீத தேர்ச்சி ஆகும்.
இந்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 88.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 37-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த ஆண்டு முன்னேற்றம் அடைந்து 37-வது இடத்தில் இருந்து 2 மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி 35 இடத்தை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 146 அரசு பள்ளிகளில் பயின்ற 9 ஆயிரத்து 20 மாணவர்கள், 10 ஆயிரத்து 590 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 610 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 253 மாணவர்கள், 9 ஆயிரத்து 789 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.9 சதவீத தேர்ச்சி ஆகும்.
இந்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள் வாரியாக திருவண்ணாமலை மாவட்டம் 30-வது இடத்தை பிடித்து உள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி, பகுதி நிதியுதவி பெறும் பள்ளி, சமூக நலத்துறை பள்ளி, பழங்குடியினர் நலத்துறை பள்ளி என 504 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 65 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர்.
போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி 3 பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.
செங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய மாற்றுத்திறன் மாணவி ரூபினி 471 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தார், அவரை ஆசிரியர்கள் பாராட்டினர்.