போளூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு
போளூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்பாக புதியதாக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு போளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்பாக புதியதாக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒரு நாடு பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும் என குறிப்பிடுகிறார். விவசாயம் சிறந்து விளங்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நமது திராவிட மாடல் ஆட்சியில் தான் விவசாயத்திற்க்கென தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம் மற்றும் பல துறைகளுக்கு தாய்த்துறையாக இருப்பது வருவாய்த்துறை ஆகும். வருவாய்த்துறையை மையமாக கொண்டு அரசின் சார்பாக பல துறைகள் இயங்குகின்றது. 1874 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து வருவாய்த்துறையை அமைத்திருக்கின்ற பகுதி போளூர் ஆகும். எனவே இந்தப்பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மிக குறைவான நபர்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே இருக்கின்ற காரணத்தினால், புதியதாக தாலுகா அலுவலக கட்டடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதியுடன், பொதுப்பணித்துறை சார்பாக ரூபாய் 3.80 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
பெண்கள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் கருதினார்கள். அவர்கள் வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் புதுமைப்பெண் என்ற மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தைசெயல்படுத்தியது மட்டுமில்லாமல் கல்லூரி படிக்கின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு உதவித்தொகையாக வழங்கும் திட்டமான தமிழ்புதல்வன் என்ற திட்டத்தைதொடங்கி வைத்து அவர்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார்.
விவசாயிகள், பெண்கள், மாணவ மாணவியர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் என அனைவருக்குமான ஆட்சியை வழிநடத்தி வருகிறார், போளூர் அரசு மருத்துவமனை, ஜமுனாமரத்தூர் ஆலங்காயம் வாணியம்பாடி சாலை அகலம் குறைவாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஜமுனாமரத்தூர் சுற்றுலா செல்லுதல், மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்ல முடியாத இடர்பாடுகள் இருப்பதால், இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமென்ற காரணத்தினால் போளூரில் நரிக்குன்று முதல் அத்திமூர் மருத்துவமனை வரை புறவழிச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் போளூரில் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சொன்னதை மட்டுமல்லாமல், மக்களின் தேவைகள் அறிந்து அதனை நிறைவேற்றுகின்ற ஆட்சி நமது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி என பொதுப்பணித்துறை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்
தொடர்ந்து பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள், பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.