போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பணி மேற்பார்வையாளர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் திண்டிவனத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது தந்தை தேவன் ஒப்பந்ததாரர்.இவர் போளூர் பகுதியில் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.
அவருடன் பணிகளை கவனித்து வந்த இறந்த தேவனின் மகன் ராஜாராம் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இந்நிலையில் அத்திமூர் திண்டிவனம் ஊராட்சியில் 15 வது நிதி குழு மாநில திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகளை செய்துள்ளார்.
இந்தப் பணிகளை கடந்த டிசம்பர் மாதம் முடித்துள்ளார். இது சம்பந்தமாக பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் புருஷோத்தமனை தொடர்பு கொண்ட போது லஞ்சமாக 10% அதாவது 20 ஆயிரம் கொடுத்தால் தான் தங்களுக்கு காசோலை எழுதுவேன் என்று சொல்லியதால் ராஜாராம் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் போலீசார் போளூர் வந்து ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை ராஜாராமிடம் கொடுத்து அனுப்பினர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்ற அவர் பணி மேற்பார்வையாளா் புருஷோத்தமனிடம்பணத்தை கொடுக்க முயற்சித்தார். அங்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் கோபிநாத், முருகன், நந்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மறைந்து இருந்து கண்காணித்தனர்.
அப்போது லஞ்ச பணத்தை தற்காலிக ஊழியர் ராஜ்குமாரிடம் கொடுக்குமாறு பணிமேற்பார்வையாளர் சொல்லி அனுப்பினார். அதன்படி லஞ்ச பணத்தை ராஜாராமிடமிருந்து தற்காலிக ஊழியர் ராஜ்குமார் பெற்றுக்கொள்ளும் போது பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமன் மற்றும் தற்காலிக ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.