மயான பாதை பிரச்சினை: வாழும்போதும் நிம்மதி இல்லை இறந்த பிறகும் நிம்மதி இல்லை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானப் பாதை பிரச்னை தொடர்பாக விவசாயிகளிடையே தகராறு ஏற்பட்டது.
பெரணம்பாக்கம் ஊராட்சியில் மயானத்துக்குச் செல்ல பொதுப் பாதை இல்லாமல் விவசாய நிலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், பெரணம்பாக்கம் ஊராட்சியில் பெரணம்பாக்கம், மாந்தாங்கல், கொல்லைமேடு ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இதில், சில சமுதாயத்தைச் சோந்தவா்கள் இறந்தால் சடலத்தை எடுத்துச் சென்று புதைப்பதற்கு, எரிப்பதற்கு அரசுக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சடலத்தை எடுத்துச் செல்ல பொதுவழி இல்லாமல் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பயிா் பாதிப்படைவதாகக் கூறி, நிலத்தின் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பெரணம்பாக்கம் ஊராட்சியை சோந்த மூதாட்டி ஒருவா் இறந்தாா். சடலத்தை அடக்கம் செய்ய விவசாய நிலத்தின் வழியே எடுத்துச் சென்றனா். அப்போது, நில உரிமையாளருக்கும், சடலத்தை தூக்கிச் சென்றவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், ஊா் பொதுமக்கள் கூடி சமாதானம் பேசினா்.
இதைத் தொடா்ந்து, சடலத்தை எடுத்துச் செல்ல நில உரிமையாளா் அனுமதி அளித்தாா். இதனால், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மயானத்துக்கு பாதை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், துணைத் தலைவா் பூங்கொடி குபேந்திரன் ஆகியோா் கூறும்போது, மயானத்துக்கு பொதுவழி வேண்டி வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மயானத்துக்கு பொதுவழி வேண்டி சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்தனா்.